வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி
வருவாய் ஈட்டும் அனைவரும், அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்றே(ஆக.,31) கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என, வருமான வரித்துறை கண்டித்துள்ளது.
கடந்த, 2017 – 18க்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரலில் துவங்கி, நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல், வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உச்சவரம்பு
வருமான வரியை குறைப்பதற்காக, வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு, உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கை, கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது. இன்றைக்குள் தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் கட்ட வேண்டி வரும் என, வருமான வரித்துறை கண்டித்து உள்ளது.
இன்றைக்குள் கட்டாதவர்களில், 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர், ரூ. 1,000 தாமத கட்டணமும்; ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்கள், ரூ.5,000 தாமத கட்டணத்துடன், டிச., 31க்குள் கணக்கு தாக்கல் செய்யலாம்.
வரும், 2019 ஜனவரி முதல், மார்ச், 31க்குள், 10 ஆயிரம் ரூபாய் தாமத கட்டணம் செலுத்தி, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும். அதன் பின், 2017 – 18க்கான வருமான வரிகணக்கு தாக்கல் செய்ய முடியாது.