6 போலீசாரின் குடும்பத்தினர்களை கடத்திய பயங்கரவாதிகள்
தெற்கு காஷ்மீரின் 6 போலீஸ்காரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். புல்வாமா, அனந்த்நாக், குல்கம் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசாரின் குடும்பத்தினர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக காஷ்மீரின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து தொடர்ந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளின் உறவினர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் பல பகுதிகளில் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று போலீசார் ஒருவரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள், அவரை கடுமையாக தாக்கி, பின்னர் விடுவித்தனர். இதன் தொடர்ச்சியாக 6 போலீசாரின் மகன், சகோதரர் உள்ளிட்டோரை கடத்திச் சென்றுள்ளனர். தங்கள் பிள்ளைகளை விடுவிக்கும்படி போலீசாரின் குடும்பத்தினர் கதறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கடந்த 28 ஆண்டுகளில் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினரை குறிவைத்து பயங்கரவாதிகள் செயல்படுவது இதுவே முதல் முறையாகும்.