ஆயுத குழுக்களிடையே கடும் மோதல்: லிபியா சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பி ஓட்டம்
வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் ஆயுதம் ஏந்திய பல்வேறு குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் திரிபோலியில் கடந்த ஒரு வாரமாக ஆயுதம் ஏந்திய 2 குழுக்களுக்கு இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதல்களில் உள்ளூர்வாசிகள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக லிபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் திரிபோலியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அயின் ஜாரா என்கிற சிறைக்கு அருகே ஆயுதம் ஏந்திய 2 குழுக்களும் நேற்று முன்தினம் கடுமையாக மோதிக்கொண்டன. இரு தரப்பினரும், துப்பாக்கியால் சுட்டும் குண்டுகளை வீசியும் தாக்கிக்கொண்டனர். இதனால் இந்த பகுதி முழுவதும் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.
இதனை பயன்படுத்தி அயின் ஜாரா சிறையில் இருந்த கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுமார் 400 கைதிகள் சிறையின் கதவுகளை உடைத்து வெளியே தப்பி ஓடினர். அவர்களை தடுத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய சிறைக்காவலர்கள், சிறையில் ஏற்பட்ட கலவரத்தையும் அதன்பின் நடந்த நிகழ்வையும் தடுக்கவில்லை.
இதற்கிடையில் திரிபோலியில், நூற்றுக்கணக்கான அகதிகள் வாழ்ந்துவரும் ஒரு முகாமின் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயுத குழுக்களின் மோதல் காரணமாக லிபியாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.