இந்தோனேஷியாவில் 2 வாரம் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 8–வது இடம்
இந்தோனேஷியாவில் இரண்டு வார காலம் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று நிறைவடைந்தது. பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 8–வது இடம் கிடைத்தது.
ஆசிய விளையாட்டு
ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் ஆகிய நகரங்களில் கடந்த மாதம் 18–ந்தேதி தொடங்கியது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்கினர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயங்கள் நடந்தன.
கடைசி நாளான நேற்று டிரையத்லான் கலப்பு பிரிவு (நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய போட்டிகளை உள்ளடக்கியது) போட்டி மட்டும் நடந்தது. இதில் ஜப்பான் குழுவினர் ஒரு மணி 30 நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். 2–வது, 3–வது இடத்தை முறையே தென்கொரியா, ஹாங்காங் அணிகள் பெற்றன.
சீனா ஆதிக்கம்
பதக்கப்பட்டியலில் மொத்தம் 37 நாடுகள் இடம் பிடித்துள்ளன. வழக்கம் போல் ஆதிக்கம் செலுத்திய சீனா 132 தங்கம் உள்பட 289 பதக்கங்கள் குவித்து, பதக்கப்பட்டியலில் கம்பீரமாக முதலிட அரியணையில் ஏறியது. நீச்சலில் மட்டும் சீனா 19 தங்கம் உள்பட 50 பதக்கங்களை கபளீகரம் செய்தது. பதக்கப்பட்டியலில் 1982–ம் ஆண்டில் இருந்து சீனா ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் 75 தங்கம், 56 வெள்ளி, 74 வெண்கலம் என்று மொத்தம் 205 பதக்கங்களுடன் 2–வது இடத்தை தட்டிச்சென்றது. 1994–ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் 2–வது இடத்தை பிடித்த ஜப்பானுக்கு நீச்சலில் கிடைத்த 19 தங்கம் உள்பட 52 பதக்கங்களே இந்த நிலையை எட்டுவதற்கு பக்கபலமாக இருந்தது.
இந்தியாவுக்கு 8–வது இடம்
இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களுடன் பட்டியலில் 8–வது இடத்தை பிடித்தது. ஒரு ஆசிய விளையாட்டில் இந்தியா அறுவடை செய்த அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2010–ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் 65 பதக்கம் வென்றதே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை இந்தியா முறியடித்து இருக்கிறது.
போட்டியை நடத்திய இந்தோனேஷியா 31 தங்கம் உள்பட 98 பதக்கங்களை அள்ளியது. இதற்கு முன்பு அந்த நாடு ஒரு போட்டித் தொடரில் 77 பதக்கங்களுக்கு மேல் பெற்றது கிடையாது. புதிதாக சேர்க்கப்பட்ட 9 விளையாட்டுகளில் மட்டும் இந்தோனேஷியா 20 தங்கத்தை வென்றிருப்பது கவனிக்கத்தக்கது.
கோலாகல நிறைவு
இரண்டு வார காலம் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஆசிய விளையாட்டு போட்டி நேற்றிரவு நிறைவு பெற்றது. நிறைவு விழா ஜகர்தாவில் உள்ள 76 ஆயிரம் பேர் அமரும் இருக்கை வசதி கொண்ட ஜி.பி.கே. ஸ்டேடியத்தில் கோலாகலமாக அரங்கேறியது.
அணிவகுப்பின் போது, இந்திய தேசிய கொடியை பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் உற்சாகமாக ஏந்திச் சென்றார். ஒவ்வொரு நாட்டின் தேசிய கொடிக்கு முன்பாக பறவை போன்று தங்க நிறத்தில் வேடமணிந்த ஒரு பெண்மணி சென்றார். அதன் பிறகு மற்ற வீரர், வீராங்கனைகள் அனைவரும் ‘ஒரே ஆசியா’ என்பதை பறைசாற்றும் வகையில் மொத்தமாக மைதானத்திற்குள் வலம் வந்தனர். விழா தொடங்குவதற்கு முன்பே பலத்த மழை கொட்டியதால், வீரர்கள் மழை கோட் அணிந்திருந்தனர். ஆனாலும் விழா தொடங்கிய போது மழை ஓரளவு ஓய்ந்து விட்டதால் பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து நடந்தது.
இதன் பின்னர் லேசர் ஒளிவெள்ளத்திற்கு மத்தியில் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், டிரம்ப்ஸ் இசை, உள்ளூர் பிரபலங்களின் பரவசப்படுத்திய பாடல்களால் ஸ்டேடியமே அதிர்ந்தது. இந்திய பாடகர் சித்தார்த் சிலாதியா, ‘ஜெய் ஹோ’ உள்ளிட்ட சில இந்தி பாடல்களை பாடி அசத்தினார். அவ்வப்போது நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கையால் இரவே பகல் போல் ஜொலித்தது. ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நிறைவு விழா 2 மணி நேரம் நடைபெற்றது.
அடுத்த போட்டி எங்கு?
முன்னதாக இந்த ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு பெறுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் அகமத் அல் பஹாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார். போட்டியை நடத்தியதில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று இந்தோனேஷியாவை பாராட்டிய அல் பஹாத், ‘இந்த அழகான தேசத்தை விட்டு நாங்கள் வருத்தமுடன் கிளம்புவதால் தான் வானமே அழுகிறது. மறக்க முடியாத அற்புதமான நினைவுகளுடன் நாங்கள் புறப்படுகிறோம்’ என்று குறிப்பிட்டார்.
அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி 2022–ம் ஆண்டு சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடக்கிறது. இதையொட்டி ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடி மற்றும் ஆசிய விளையாட்டின் தீபத்துக்குரிய பேட்டன் ஆகியவை சீனாவிடம் வழங்கப்பட்டது.
மதிப்பு மிக்க வீராங்கனை
இந்த ஆசிய விளையாட்டின் மதிப்பு மிக்க விளையாட்டு நட்சத்திரமாக ஜப்பான் நீச்சல் வீராங்கனை 18 வயதான இகீ ரிகாகோ தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆசிய விளையாட்டில் அவர் நீச்சலில் 6 தங்கம், 2 வெள்ளிப்பதக்கம் வென்று பிரமாதப்படுத்தினார். ஆசிய விளையாட்டில் மதிப்பு மிக்க வீரர் விருது 1998–ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறும் முதல் வீராங்கனை இவர் தான். விருதுடன் ரூ.35 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.