கடினமான சூழ்நிலைகளில் எங்களை விட இங்கிலாந்து அச்சமின்றி விளையாடியது: விராட் கோலி கருத்து
இந்தத் தொடரின் முக்கிய அம்சமாக இங்கிலாந்தின் கீழ்வரிசை பேட்ஸ்மென்கள் காட்டிய முதுகெலும்பை இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கூடக் காட்ட முடியவில்லை என்பதே தொடரை இழந்ததற்கு முக்கியக் காரணம்.
பவுலர்கள் நான் நன்றாக வீசினேன், விக்கெட்டுகள் வீழ்த்தினேன் என்று கூறுவது போல் தெரிகிறதே தவிர நோக்கத்துடனும் குறிக்கோளுடனும் வீசியதாகத் தெரியவில்லை, கில்லர் இன்ஸ்டிங்க்ட் இல்லை. அதனால்தான் இங்கிலாந்தை 3 டெஸ்ட் போட்டிகளில் முழுதும் ஆல் அவுட் செய்தும் கடைசியில் தோல்வியடைந்த அணியாக இந்தியா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓர் அணியாக குறிக்கோளுடன் ஆடவில்லை. ஆஸ்திரேலிய அணியினருக்கு ஒரு கெட்ட பெயர் உண்டு, ‘வேட்டை நாய்கள்’ என்பதே அது. அத்தகைய மனநிலை இருந்தால்தான் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வீழ்த்த முடியும்.
இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
”எங்களுக்கு 245 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்ததன் மூலம் இங்கிலாந்து உண்மையில் சிறப்பாக ஆடினர் என்றே நான் கருதுகிறேன்.
பிட்சின் நிலை, பந்துகள் திரும்பிய விதம் எங்களுக்குப் பெரிய சவாலாக இருந்தது. கடந்த இரவு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே கருதினோம், ஆனால் நாங்கள் விரும்பிய தொடக்கம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணி ஓய்வு ஒழிச்சலின்றி எங்களுக்கு தொடர்ச்சியாக டெஸ்ட் முழுதும் நெருக்கடி கொடுத்தது.
அவர்களுக்குப் பாராட்டுகள். நானும் ரஹானேவும் ஆடும் போது மனதில் அந்தக் குறிப்பிட்ட பந்து, ஒரு பந்து ஒரு கணத்தில் என்றவாறு கவனம் செலுத்தினோம். நானும் ரஹானேவும் களத்தில் இருந்த போது விரட்டல் வெற்றிகரமாக முடியும் என்று நம்பினோம். ஆனால் அவர்கள் ஏற்கெனவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டதால் இன்னும் 2 விக்கெட்டுகள் விழுந்தால் ஆட்டம் கை நழுவி விடும் என்ற நெருக்கடி எனக்கும் ரஹானேவுக்கும் இருந்தது.
நாங்கள் கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடினோம், ஆனால் நம்மிடமிருந்து இங்கிலாந்து ஆட்டத்தைப் பறித்துச் சென்றது. இதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகு. இருப்பினும் ‘இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால்கள்’ இருக்கவே செய்யும். அவை அப்படியிருந்திருந்தால் ஆட்டம் எங்கள் வழிக்குத் திரும்பியிருக்கும்.
முதல் இன்னிங்சில் இன்னும் கொஞ்சம் பெரிய முன்னிலை பெற்றிருக்கலாம், ஆனால் குறைந்த முன்னிலைக்கு புஜாராவின் ‘பிளைண்டர்’ இன்னிங்ஸ்தான் காரணம். புஜாராவின் ஆட்டம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
நிறைய காரணங்களைக் கூறலாம். ஆனால் அதிகம் எதிர்மறைகள் இல்லை. இங்கிலாந்து எங்களை விட சிறப்பாக ஆடியது. ஆகவே அவர்கள் வெற்றிக்குத் தகுதி பெற்றவர்களாகின்றனர். சாம் கரன், மொயின் அலி போன்ற கீழ் வரிசை பேட்ஸ்மென்கள் அடித்து ஆடுவது உண்மையில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய அனுகூலமாகும். அந்நிலையில் கூட்டணி அமைத்து எதிரணியினரைக் கதற விடலாம்.
இங்கிலாந்து அணியிடம் பயமற்ற அணுகுமுறையுடன் திறமையும் உள்ளது. கடினமான சூழ்நிலைகளில் எங்களை விடவும் தைரியமாக இங்கிலாந்து ஆடியது. கீழ்வரிசை வீரர்களிடமிருந்து ரன்கள் மிக மிக முக்கியமானவை. சாம் கரனுக்கு நான் வாழ்த்துகளைக் கூறுகிறேன், அவர் மிக அருமையான ஒரு கிரிக்கெட் வீரராக வருவார்.
லார்ட்ஸ் டெஸ்ட்டைத் தவிர எங்களை இங்கிலாந்து முழுவதும் ஆட்கொண்டது என்று கூற முடியாது. இரு அணிகளும் தரமான கிரிக்கெட்டை ஆடுகிறோம். ஓவலிலும் இதே தீவிரத்துடன் ஆடுவோம். நெருக்கடி தருணங்களில் ஆட்டத்தை எப்படி ஸ்திரப்படுத்துவது என்ற ஒரு விஷயத்தைச் சரிசெய்ய ஆர்வமாக உள்ளோம், அனைவருமே இது குறித்து யோசித்துப் பயிற்சி எடுத்து வருகிறோம்’’.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.