கால்வாய்களுக்கு பதில் கமிஷனை தான் தூர்வாருகிறார்கள் : ஸ்டாலின்
திருச்சி முக்கொம்பு மேலணையில், வெள்ளத்தால் உடைந்த மதகுகளை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகள் குறித்தும் கேட்டரிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முக்கொம்பு மதகு போல் தான் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது. முன்கூட்டியே ஆய்வு செய்திருந்தால் மதகுகள் உடைந்ததை தடுத்திருக்கலாம். எந்த வித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் அலட்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று தமிழக முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. கடந்த 24ம் தேதி முதல்வர் இங்கு பார்வையிட்டு, பணிகள் விரைவில் முடிவடையும் என உறுதி அளித்தார். ஆனால் இன்னும் 40 சதவீதம் பணி கூட முடியவில்லை.
ஆய்வுக்கு வந்த போது காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது இல்லை என அறிவுபூர்வமான கருத்து ஒன்றை முதல்வர் கூறினார். அவர் சொன்ன கருத்து,ரோம் நகரம் தீபிடித்து எரிகையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததை நினைவுபடுத்துகிறது. நீரோ மன்னனின் வாரிசு போல் முதல்வர் பேசி உள்ளார். காய்ச்சல் சொல்லாமல் வருகிறது கமிஷனை பொறுத்தவரை சொல்லிக் கொண்டு வருகிறது.
மேட்டூர் அணை கடந்த மாதம் 19 ம் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகும் நிலையில் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராத நிலை தான் உள்ளது. கமிஷனை தூர்வாருகிறார்கள். ஆனால் கால்வாய்களை தூர்வாரவில்லை. இது ரூ.5000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதையே காட்டுகிறது. ஊழல் மற்றும் மணல் கொள்ளையால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கோமா நிலையில் தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, மதகுகள் உடைய காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. எனவே விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும் நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக அரசின் நிலை பற்றி திமுக மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது பற்றி எந்த விளக்கமும் அரசு தெரிவிக்கவில்லை. கொள்ளையடிப்பதில் தான் அரசு கவனமாக இருந்து வருகிறது. ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்எல்ஏ.,க்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் மக்கள் நல திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.