Breaking News
பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கு ரூ.2,100 கோடி நிதி உதவி ரத்து: அமெரிக்கா முடிவு

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க புரியாக இருந்து வருகிறது என்பது அமெரிக்காவின் நம்பிக்கை.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இயங்கி வருகிற தலீபான் பயங்கரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஹக்கானி வலைச்சமூக பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கொண்டு, சதித்திட்டம் தீட்டி, ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் நடத்தி அமெரிக்க படையினரையும், ஆப்கானிஸ்தான் படையினரையும் கொன்று வருவதாக அமெரிக்கா கருதுகிறது.

எனவேதான் பாகிஸ்தான் தன் மண்ணில் இருந்து கொண்டு, செயல்பட்டு வருகிற எல்லா பயங்கரவாத இயக்கங்கள்மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உலக அளவிலான பயங்கரவாத ஒழிப்பு போரில் அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள பாகிஸ்தான், அதற்காக அமெரிக்காவின் நிதி உதவியை பெற்று வருகிற பாகிஸ்தான், அந்த பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை என்பதில் டிரம்ப் நிர்வாகம் அதிருப்தி அடைந்து உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் கோடி) அதிகமான தொகையை உதவியாக அமெரிக்கா முட்டாள்தனமாக வழங்கி வந்திருக்கிறது. அவர்கள் எதையும் நமக்கு தந்துவிடவில்லை. அவர்கள் பொய் சொல்கிறார்கள்; ஏமாற்றுகிறார்கள்; நமது தலைவர்களை முட்டாள்களாக கருதுகிறார்கள்; ஆப்கானிஸ்தானில் நாம் வேட்டையாடுகிற பயங்கரவாதிகளுக்கு அவர்கள் அடைக்கலம் தருகிறார்கள். இனிமேலும் அவர்களுக்கு உதவ முடியாது என டிரம்ப் ஏற்கனவே திட்டவட்டமாக கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்புக்காக வழங்க இருந்த 300 மில்லியன் டாலர் நிதி உதவியை (சுமார் ரூ.2,100 கோடி) நிறுத்துவதற்கு அமெரிக்க ராணுவம் முடிவு செய்து உள்ளது.

இதை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் செய்தி தொடர்பாளர் கோன் பால்க்னர் உறுதி செய்து உள்ளார். இதுபற்றி அவர் நேற்று முன்தினம் குறிப்பிடுகையில், “பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் டாலர் நிதி உதவியை நிறுத்தி விட்டு, அதைப் பிற முன்னுரிமையான விஷயங்களுக்காக அமெரிக்க ராணுவம் செலவிடும்” என கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “எல்லா பயங்கரவாத இயக் கங்களையும் ஒடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானை தொடர்ந்து வலியுறுத்துவோம்” எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் பாகிஸ்தான் வந்து, அதன் புதிய பிரதமர் இம்ரான்கானிடம் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாக முக்கிய பேச்சு நடத்த உள்ள நிலையில், அந்த நாட்டுக்கான ராணுவ நிதி உதவி 300 மில்லியன் டாலரை அமெரிக்கா நிறுத்தி விட முடிவு செய்து இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.