பாஜகவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் சவால்
சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண் ஒருவருடன் தமிழிசை சௌந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். இதனையடுத்து சோபியா கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ஜனநாயக விரோத – கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!. அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?. நானும் சொல்கின்றேன்! பா.ஜ.கவின் பாசிச ஆட்சி ஒழிக!’ என்று பதிவிட்டுள்ளார்.