Breaking News
வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக தவறான தகவலை அளித்த வருமான வரித்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உ.பி.,யில் வருமான வரித்துறை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு ஒன்றை, அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், 2016 ல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, வருமான வரித்துறையின் காசியாபாத் கமிஷனர், தாக்கல் செய்த பதில் மனுவில், 2012 ல் இதேபோல் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக கூறியிருந்தார்.

பொழுதுபோக்கு தளமல்ல

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிலுவையில் உள்ளதாக கூறப்படும் வழக்கை கோர்ட் விசாரணை நடத்தி முடித்து வைத்துள்ளது. வழக்கை தொடர்ந்தவர், கோர்ட்டில் தவறான தகவலை தருகிறார். வருமான வரித்துறை கமிஷனர், வழக்கை சாதாரணமாக எடுத்து கொண்டது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. பதில் மனு தாக்கல் செய்ய 596 நாட்கள் தாமதத்திற்கு விளக்கமளிக்காமல், வழக்கு நிலுவையில் உள்ளதாக தவறான தகவலை தருகிறார். தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட் பொழுதுபோக்கு தளமல்ல. கோர்ட்டை இப்படி நடத்தாதீர்கள். வருமான வரித்துறைக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 4 வாரங்களுக்குள் இதனை செலுத்த வேண்டும் எனக்கூறியுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.