Breaking News
மும்பை: உறியடி திருவிழா உற்சாக கொண்டாட்டம் – மனித பிரமிடு சரிந்து விழுந்ததில் 60 பேர் காயம்

மராட்டியத்தில் நேற்றுமுன்தினம் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் உச்ச நிகழ்ச்சியான ‘தஹிஹண்டி’ எனப்படும் உறியடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பை மற்றும் தானே நகரங்களில் உறியடி திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி முக்கிய வீதிகளின் மத்தியில் பல அடி உயரத்தில் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட தயிர்பானைகள் கட்டி தொங்க விடப்பட்டு இருந்தன. மலர் மாலைகள் மற்றும் தோரணங்களும் வீதிகளை அலங்கரித்தன. அரசியல் கட்சிகள் சார்பிலும் உறியடி திருவிழா நடந்தது.

மேடை நடன நிகழ்ச்சி, பார்வையாளர்களின் ஆட்டம், பாட்டம் என உறியடி திருவிழா களை கட்டியிருந்தது. இந்தி நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தினார்கள். உறியடி நிகழ்ச்சிகளில் உள்ளூர் இளைஞர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டார்கள். 5 முதல் 9 அடுக்கு வரையிலும் அவர்கள் உற்சாகமாக மனித பிரமிடுகளை அமைத்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த தயிர்பானைகளை உடைத்தார்கள்.

ஆண்களுக்கு இணையாக பெண்களும் உறியடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தயிர்பானைகளை சுலபமாக உடைத்து அசத்தினார்கள். உறியடி நிகழ்ச்சியை பொதுமக்கள் அதிகளவில் திரண்டு பார்த்து ரசித்தனர். தயிர்பானை உடைப்பதை பார்த்ததும் அவர்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

தயிர்பானைகளை உடைத்த குழுவினருக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. மும்பை, காட்கோபர் மற்றும் தானேயில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு பார்த்து ரசித்தார்.

பல இடங்களில் உறியடி நிகழ்ச்சியின் போது, தயிர் பானையை உடைப்பதற்காக மனித பிரமிடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, தவறி விழுந்து பலர் காயம் அடைந்தனர். இவ்வாறு காயம் அடைந்த 60 பேர் உடனுக்குடன் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள். இதில் சிகிச்சை முடிந்து 20 பேர் வீடு திரும்பினர். 40 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.