கேரளா: எலிக்காய்ச்சலுக்கு 74 பேர் பலி – 21 பேருக்கு நோய் அறிகுறி
கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
தற்போது அங்கு வெள்ளம் முழுவதுமாக வடிந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. அதே சமயம் மழைக்கு பிந்தைய தொற்றுநோய்கள் கேரள மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகின்றன.
குறிப்பாக அங்கு எலிக்காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 பேர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிர் இழந்தனர். நேற்று எர்ணாகுளம் மாவட்டம் வடக்கு பரவூரை சேர்ந்த உத்தமன் (வயது 48) என்பவர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். பரனங்கானம் பகுதியை சேர்ந்த ஷோபா (48) என்பவரும் எலிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். இதேபோன்று திருச்சூர் மாவட்டம் பாஞ்சால் பகுதியில் 2 பேரும், கொடுங்கல்லூர், சாலக்காடு, இடவிலக்கு, அழகப்பன்நகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் சேர்த்து நேற்று 6 பேர் இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்ந்து மாநிலம் முழுவதும் எலி காய்ச்சலுக்கு இதுவரை 74 பேர் பலியாகி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்தபோது தொற்றுநோய் பரவி இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.திருச்சூர் மாவட்டத்தில் 21 பேருக்கு எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் வாலூர், ஈராட்டுப்பேட்டா பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மீனிச்சல், கீரக்கடவு, நீட்டூர், முண்டக்கயம் பகுதிகளில் அம்மைநோயும், வயிற்றுப்போக்கும் பரவி வருகிறது.
இந்த தொற்றுநோய், விலங்குகளின் சிறுநீர் மூலமாக மக்களுக்கு பரவுவதாக எச்சரிக்கை விடுத்து இருக்கும் சுகாதாரத்துறை மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான 13 மாவட்டங்களிலும் எலி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
அதே சமயம் மாநிலம் முழுவதும் எலி காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டதாகவும், எனவே மக்கள் அது குறித்து பீதியடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்துள்ளார்.