Breaking News
பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை: சப்-இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஒரு பெண், 2010-ம் ஆண்டு, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

நான், சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய போது, உளவுப்பிரிவு(எஸ்.பி.சி.ஐ.டி.) ஏட்டாக இருந்த செந்தாமரைக்கண்ணன் (இவர், தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்) தவறான நோக்கத்துடன் என்னிடம் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, என் மீது அவதூறுகளை பரப்பினார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதுகுறித்தும், பெண் போலீசார் பலருக்கு பாலியல் ரீதியாக செந்தாமரைக்கண்ணன் தொந்தரவு கொடுத்தது குறித்தும் அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரனுக்கு (இவர், தற்போது ஐ.ஜி.யாக உள்ளார்) புகார் அனுப்பினேன். ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் செந்தாமரைக்கண்ணன் மீதான பல்வேறு புகார்கள் குறித்து பத்திரிகையில் செய்தி வெளியானது. இதற்கு நான்தான் காரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், என்னை பழிவாங்கும் நோக்கத்தில் எனக்கு குற்றச்சாட்டு நோட்டீஸ்(மெமோ) அனுப்பப்பட்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.

செந்தாமரைக்கண்ணன், ராஜசேகரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதாலும், அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றிருந்ததாலும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, போலீஸ் அதிகாரி ராஜசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு ஐ.ஜி. ஸ்ரீலட்சுமிபிரசாத் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், மனுதாரருக்கு ஏட்டாக இருந்த செந்தாமரைக்கண்ணன் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார்; போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ராஜசேகரன், மனுதாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் டி.ஐ.ஜி.க்கு தவறான தகவலை கொடுத்து இடமாறுதல் செய்து உள்ளார் என்று கூறப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்கள் இருவரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிகிறது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன், போலீசாருக்கான நன்னடத்தை விதியை மீறி செயல்பட்டு உள்ளார். இதுபோன்ற நபர்கள் தனிப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் நன்மதிப்பை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த போலீஸ் துறையின் நன்மதிப்பை கெடுத்து விடுவர். இதுபோன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே போலீஸ் துறை சிறப்பாக செயல்பட முடியும்.

செந்தாமரைக்கண்ணன் மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

ராஜசேகரன், தவறான தகவல் அடிப்படையில் மனுதாரரை இடமாறுதல் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்காக செந்தாமரைக்கண்ணனுக்கு ரூ.3 லட்சமும், ராஜசேகரனுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை தமிழக அரசு, மனுதாரருக்கு 4 வாரத்துக்குள் வழங்கி விட்டு, சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் இருவரிடமும் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.

போலீசாரிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது குறிப்பாக பெண் போலீசார் அளிக்கும் புகார்கள் மீது உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.