பேரணிக்கு எந்த நோக்கமும் இல்லை ; கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே பேரணி-மு.க.அழகிரி
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று அதிரடியாக கூறினார்.
சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.
அதன்படி பேரணிக்கான முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் பேரணி நடத்த அனுமதி அளித்தனர்.
அதன்படி திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்கியது. பேரணியில் மு.க அழகிரி, துரை தயாநிதி அழகிரி, கயல்விழி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமானோர் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். கருப்பு சட்டையில் தொண்டர்கள் வந்திருந்தனர். அவருடைய ஆதரவாளர் இசக்கிமுத்து, மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மன்னன் உள்ளிட்டோருடன் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாகனத்தில் பேரணியின் முன்னே வர தொண்டர்கள் பின்னால் வந்தனர்.
பேரணி நடக்க உள்ள இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் இடம்பெற்று இருந்தது. அதேபோல் வித்தியாசமான வசனங்களுடன் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் அதிக அளவில் போலீசார் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எவ்வளவு பேர் வந்து இருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை . இந்த பேரணி வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலை சென்றடைந்தது.
அங்கு மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க அழகிரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மகன் துறை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தந்தை கருணாநிதி இறந்த 30-ம் நாளில் அஞ்சலி செலுத்தவே அமைதி பேரணி நடைபெற்றது. வேறு எந்த நோக்கமும் கிடையாது இந்த பேரணியில் கலந்து கொண்ட கலைஞரின் உண்மையான தொண்டர்களுக்கு நன்றி. இந்த பேரணிக்கு ஒத்துழைத்த காவல்துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா? என் கேள்வி எழுப்பினார்.