மு.க .அழகிரி இன்று ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி : போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தி.மு.க.வில் சேர அவர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன.
கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அமைதியாக இருந்து வந்த மு.க.அழகிரி, கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களுக்கு பேட்டியளித்த மு.க.அழகிரி, “எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்” என்று அதிரடியாக கூறினார்.
இந்தநிலையில், மதுரையில் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ந்தேதி (இன்று) அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் ஒரு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.
பேரணி இன்று நடைபெறும் நிலையில், முன்னேற்பாடுகளை செய்வதற்காக நேற்று முன்தினமே மு.க.அழகிரி மதுரையில் இருந்து சென்னை வந்தார். அவரது சார்பில், அமைதி பேரணிக்கு போலீசாரிடம் அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. போலீசாரும் அதற்கு அனுமதி அளித்துவிட்டனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி தொடங்குகிறது. இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக அவரது ஆதரவாளர்களும் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர்.
இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைகிறது. அங்கு, மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்துகிறார். மேலும், தனது அரசியல் பயணத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்களின் வாகனங்களும் எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்ற தகவலும் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.