6 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு : தேசிய புலனாய்வு முகமை கோர்ட்டு நடவடிக்கை
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள கனகமாலா என்னும் இடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் மன்சித் முகமது, சுவாலி முகமது, ரஷித் அலி, ராம்சத் என்.கே., சப்வன், ஜசிம் என்.கே. ஆகிய 6 இளைஞர்கள் 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2–ந்தேதி ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் அவர்கள், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பிரமுகர்கள், பகுத்தறிவுவாதிகள் போன்ற முக்கிய பிரமுகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தீட்டியது தெரிய வந்தது. இவர்கள் சமூக ஊடகங்களில் தங்களுக்கென்று தனிப் பகுதிகளை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் 6 பேர் மீதும் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு மார்ச் மாதம் எர்ணாகுளம் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், இந்த கோர்ட்டு கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.