ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவு
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோ என்னும் தீவு அமைந்துள்ளது. இத்தீவில் இன்று அதிகாலை 3.08 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கம், சுமார் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சுமார் 1.9 மில்லியன் மக்கள் வாழும் ஹொக்கைடோ தீவின் தலைநகரான சப்போரோவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படாத போதும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 3 மில்லியன் வீடுகளில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்துள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனிடையே மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் பேரழிவு மேலாண்மை நிறுவனம், நிலநடுக்கத்தால் அட்ஷூமா பகுதியில் பலர் காணாமல் போயுள்ளனர் எனக் கூறியுள்ளது.
தீவிலுள்ள டோமரி அணுமின்நிலையத்தில் இயங்கி வரும் மூன்று உலைகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும், மாற்று ஜெனரேட்டர் வசதியுடன் மின்சாரம் வழங்கப்படும் என ஜப்பான் அணுமின்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தொலைதொடர்பு வசதிகளும் இந்நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.