தமிழக ஆசிரியை உள்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
மறைந்த முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5–ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பள்ளியின் கல்வித்தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் வாழ்க்கையை செழுமையாக்குதல், ஆசிரியப்பணியை கொண்டாடுதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்து ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 6 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 45 பேர் விருது பட்டியலில் இடம்பெற்றனர்.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே ஆசிரியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியப் பணியை திறம்பட மேற்கொண்டு இருப்பதுடன், சமூகப்பணியையும் சிறப்பாக செய்து வந்ததால், இவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
ஆர்.ஸதி உள்ளிட்ட 45 பேருக்கும் விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடைபெற்றது. அவர்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மந்திரிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விருது பெற்றது குறித்து கோவை ஆசிரியை ஸதி கூறியதாவது:–
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நான் திறம்பட பணியாற்றினேன். கிராமத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்க ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை 6 மாணவ, மாணவிகள் மூலம் உருவாக்கினேன். பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கணினி மூலம் தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி கற்பிக்க வசதிகளை ஏற்படுத்தி உள்ளேன். மேலும், மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்சி, கணிதப்பயிற்சி போன்றவற்றையும் தன்னார்வத்துடன் அளிக்கிறேன். இதையெல்லாம் பாராட்டி எனக்கு விருது தந்து உள்ளனர்.
எனக்கு விருது அறிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது அதை கையில் வாங்கியது அதைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விருது என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியை ஸதியின் கணவர் பிரதீப்குமார், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர்களுக்கு பிரசிதா (வயது 20) என்ற மகளும், கிருஷ்ண பிரஜ்வின் (14) என்ற மகனும் உள்ளனர். இருவரும் ராணுவத்தில் சேர விரும்புவதாக ஸதி தெரிவித்தார்.
முன்னதாக விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆசிரியை ஸதிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘தலைமை ஆசிரியை ஸதி பல்வேறு சமூக நடவடிக்கைகள் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி உள்ளார். பல்வேறு முயற்சிகள் மூலம் அவரது கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடமற்ற கிராமமாக மாற்றி உள்ளார். மேலும், கல்வி சாராத நடவடிக்கைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்’’ என்று கூறி உள்ளார்.