கழுத்தில் நகர்ப்புற நக்சல் அட்டை: எழுத்தாளர் கிரீஷ் கர்னாட் மீது பெங்களூரு போலீஸில் புகார்
பெங்களூருவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் பெங்களூருவில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இதில் குஜராத் எம்எல்ஏவும், தலித் செயற்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் ஞானப்பீட விருது பெற்ற கன்னட எழுத்தாளரும், நடிகருமான கிரீஷ் கர்னார்ட் பார்வையாளராக பங்கேற்றார். அப்போது அவர், ”நானும் நகர்ப்புற நக்சல் தான்” என எழுதப்பட்ட அட்டையை தனது கழுத்தில் அணிந்து வந்திருந்தார். அண்மையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில், இதனை அவர் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் அம்ருதேஷ் என்பவர் விதான சவுதா காவல் நிலையத்தில் கிரீஷ் கர்னாட்டுக்கு எதிராக நேற்று புகார் அளித்தார். அதில், “எழுத்தாளர் கிரீஷ் கர்னாட், ‘நானும் நகர்ப்புற நக்சல் தான்’ என எழுதப்பட்ட அட்டையை அணிந்து வந்ததை ஊடகங்களில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
தடைசெய்யப்பட்ட நக்சலைட் அமைப்பை நியாயப்படுத்தும் வகையில் கிரீஷ் கர்னாட் இவ்வாறு அட்டையை அணிந்து வந்திருக்கிறார். எனவே, அவர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்”என குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்