நான் இந்தியா செல்வதை நீதிபதி தான் முடிவு செய்வார்: விஜய் மல்லையா
இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார். இதனிடையே இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. போட்டியை காண ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த மல்லையா ஏ.என்.ஐ. செய்தியாளரின் காமிராவில் பிடிபட்டார்.
இந்நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறுகையில் ஏ.என்.ஐ. செய்தியாளர் விஜய் மல்லையாவிடன் இந்தியா திரும்புவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மல்லையா, நான் இந்தியா செல்வதை நீதிபதிதான் முடிவு செய்வார். கிரிக்கெட் விளையாட்டின் போது நான் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிப்பதில்லை என கூறியவாறு சொகுசு காரில் டாட்டா காண்பித்து ஏறிச்சென்றார்.