யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து: பிரான்ஸ் – ஜெர்மனி ஆட்டம் டிரா ஆனது
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களுக்கான கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கலந்து கொள்ளும் யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 55 அணிகள் கலந்து கொண்டுள்ளது. இந்தத் தொடர் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்த திட்டமிப்பட்டுள் ளது. ஐரோப்பிய நாடுகள் இடையிலான நட்புரீதியிலான ஆட்டங்களுக்கு மாற்றாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையில் பட்டம் வென்ற பிரான்ஸ், 2-வது இடம் பிடித்த குரோஷியா, முன்னாள் சாம்பியனான ஜெர்மனி, போர்ச்சுக்கல் உள்ளிட்ட பல்வேறு அணிகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் இந்தத் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளான நேற்று முனிச் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் – ஜெர்மனி அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் வேல்ஸ் – அயர்லாந்து அணிகள் மோதின. இதில் வேல்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் டாம் லாரன்ஸ், கராத் பாலே, ஆரோன் ராம்சே, ராபர்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தத் தொடரின் அனைத்து ஆட்டங்களும் சோனி சிக்ஸ் சானலில் நேரடி ஒளிபரப்பாகிறது.