ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வீராங்கனையின் தாயாரிடம் செயின் பறிப்பு; சுயநினைவு இழப்பு
இந்தோனேசியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்தன. இதில் தடகள போட்டியின் ஹெப்டாத்லான் பிரிவில் இந்தியா சார்பில் மேற்கு வங்காள வீராங்கனை சுவப்னா பர்மன் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றார். இவரது தாயார் பசானா பர்மன்.
இந்த போட்டியில் தனது மகள் தங்க பதக்கம் வென்ற காட்சியை ஆனந்த கண்ணீருடன் பசானா காணும் வீடியோ வைரலாக பரவியது. இந்த நிலையில் நேற்று பசானாவுக்கு துயர சம்பவம் நேரிட்டுள்ளது.
சந்தைக்கு சென்று விட்டு உறவினர் ஒருவரது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் அமர்ந்தபடி பசானா நேற்றிரவு 7.30 மணியளவில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரை 2 பைக்குகளில் 4 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அவர்கள் பசானாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து உள்ளனர்.
இந்த சம்பவத்தினை அடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி தரையில் அதிர்ச்சியில் அமர்ந்த பசானா பின் மயங்கி விட்டார்.
இந்த தகவல் அறிந்ததும், கிராமவாசிகள் பசானாவின் வீட்டின் முன் கூடி விட்டனர். அவர்களாக முன்வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேட தொடங்கினர். பசானாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.