கடைசி டெஸ்ட் போட்டி: டிராவிட்டிடம் பேசியது பதற்றத்தை தணித்தது – இந்திய வீரர் ஹனுமா விஹாரி
‘இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கும் முன்பு முன்னாள் கேப்டன் டிராவிட்டிடம் பேசியது எனது பதற்றத்தை தணித்தது’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி தெரிவித்தார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்த ஆந்திராவை சேர்ந்த 24 வயதான ஹனுமா விஹாரி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 7-வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேஜாவுடன் (ஆட்டம் இழக்காமல் 86 ரன்) இணைந்து 77 ரன்கள் சேர்த்து இந்திய அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உறுதுணையாக இருந்தார்.
அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்த ஹனுமா விஹாரி தனது சர்வதேச கிரிக்கெட் அறிமுக போட்டி குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்குவதற்கு ஒருநாள் முன்னதாக டிராவிட்டை டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினேன். சில நிமிடங்கள் என்னுடன் பேசிய அவர் பல நல்ல ஆலோசனைகளை வழங்கி ஊக்கம் அளித்தார். அவருடன் பேசியதன் மூலம் எனக்கு இருந்த பதற்றம் சற்று தணிந்ததாக நினைக்கிறேன். டிராவிட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு சகாப்தம். அவர் சொன்ன ஆலோசனைகள் எனது பேட்டிங்குக்கு உதவிகரமாக இருந்தது.
‘உனக்கு திறமை இருக்கிறது. மனதிடத்துடனும், பொறுமையை இழக்காமலும் களத்தில் நின்று உனது பேட்டிங்கை ரசித்து விளையாடு’ என்று எனக்கு அறிவுரை வழங்கினார். என்னுடைய பேட்டிங் இந்த அளவுக்கு சிறப்பாக அமைந்ததற்கு டிராவிட் தான் முக்கிய காரணம். இந்திய ‘ஏ’ அணியில் நான் இடம் பிடித்து இருந்த போது அவர் அளித்த ஆலோசனை மற்றும் நுணுக்கங்கள் தான் என்னை சிறந்த வீரராக மாற்றி இந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறது.
உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் பந்து வீச்சை தொடக்கத்தில் எதிர்கொள்கையில் பதற்றமாகவும், நெருக்கடியாகவும் இருப்பதை உணர்ந்தேன். ஆனால் களத்தில் அப்போது இருந்த கேப்டன் விராட்கோலி எனக்கு தைரியம் ஊட்டினார்.
அவர் அடித்து ஆடியது எனக்கு நல்ல நம்பிக்கையை கொடுத்ததுடன், எனது பதற்றத்தையும் போக்கியது. இந்திய அணியில் இடம் பிடித்தது எனக்கு திரில்லாக இருந்தது. எனது குடும்பத்தினரும் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய அணியில் எனது இடத்தை தக்க வைக்க நான் நிறைய பங்களிக்க வேண்டும் என்பது தெரியும். அதனை செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணிக்காக நிறைய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். இவ்வாறு ஹனுமா விஹாரி கூறினார்.