Breaking News
சென்னை-சேலம் இடையே அமையவுள்ள 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள்

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை, ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் முடிவு செய்தன. இந்த திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தும் ஆரம்பக்கட்ட நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டபோது, கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 8 வழிச்சாலை திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி இருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு முதலில் ரூ.10 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அதிகாரிகள் மேற்கொண்ட களப்பணி காரணமாக திட்ட மதிப்பீட்டு தொகையானது ரூ.7 ஆயிரத்து 210 கோடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக வனப்பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது 103 ஏக்கராக அது குறைக்கப்பட்டு உள்ளது.

அதுபோல வனப்பகுதியில் 13.2 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது இந்த தூரம் 9 கி.மீ. ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த பசுமை வழிச்சாலை 90 மீட்டர் அகலத்தில் மதிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது சாலையின் அகலம் 70 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் இந்த சாலை செல்லும் போது கணக்கிடப்பட்டிருந்த 70 மீட்டர் அகல சாலையானது, தற்போது 50 மீட்டராக குறைக்கப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் அணுகுசாலை (சர்வீஸ் ரோடு) அமைக்க இருந்த திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 560 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அது 1,900 ஹெக்டேராக குறைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சில இடங்களில் அமைக்கப்பட இருந்த 8 வழிச்சாலையை, 6 வழிச்சாலையாக மாற்றி அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் போன்ற தேவைகள் அடிப்படையில் இப்பகுதியில் 8 வழிச்சாலை அமைய வாய்ப்பு உள்ளது. முக்கியமாக பாலாற்றின் குறுக்கே மட்டுமே பாலம் அமைக்கப்படும். வேறு இடங்களில் பாலம் அமைக்கவேண்டிய சூழல் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.