Breaking News
தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கடித்து 2½ வயது குழந்தையை கொன்ற தாய் கைது பரபரப்பு வாக்குமூலம்

திருப்பூரை அடுத்த சாமளாபுரத்தில் வசிப்பவர் சுமைதூக்கும் தொழிலாளி நாகராஜ் (வயது 23). இவருடைய மனைவி தமிழ் இசக்கி (21). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் சிவன்யாஸ்ரீ என்ற மகள் இருந்தாள்.

கடந்த 9-ந் தேதி மாலை குழந்தை சிவன்யாஸ்ரீ வாயில்நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தாள். உடனே குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

தாயார் கைது

இதற்கிடையில் சிவன்யாஸ்ரீயின் பாட்டி தனலட்சுமி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தமிழ் இசக்கியிடம் விசாரித்தனர்.

விசாரணையில் கணவர் எந்தநேரமும் ‘வாட்ஸ்- அப்’பில் பேசிக்கொண்டும், குறுந்தகவல்களை யாரோ ஒருவருக்கு அனுப்பிக்கொண்டும் இருந்ததால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு குழந்தையை பிளாஸ்டிக் தொட்டிக்குள் மூழ்கடித்து கொன்றதாக தமிழ் இசக்கி தெரிவித்தார். இதையடுத்து தமிழ் இசக்கியை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் இசக்கி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சந்தேகம்

தினமும் வேலைக்கு செல்லும் கணவர் நாகராஜ், இரவு தாமதமாகத்தான் வருவார். நான் போன் செய்தால் போனை எடுத்து பேச மாட்டார். மேலும் செல்போனில் அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் கூறும். மேலும் அவர் வேறு ஒருவருடன் ‘வாட்ஸ்-அப்’பில் தொடர்பு கொண்டு பேசுவது தெரியவந்தது.

அவருக்காக குடும்பத்தை உதறிவிட்டு வந்தேன். ஆனால் இனி நடுத்தெருவுக்கு சென்று விடுவேனோ? என்று பயம் ஏற்பட்டது. எனவே குழந்தையை கொன்று விட்டு நானும் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி முதலில் ஒரு குச்சியை எடுத்து குழந்தையின் தலையில் ஓங்கி அடித்தேன். பின்னர் குழந்தையின் வாயை பொத்தி பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்றேன்.

தற்கொலை முயற்சி

பின்னர் தற்கொலை செய்ய முடிவு செய்து கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றேன். அதற்குள் எனது கணவர் வந்ததால் என்னால் தற்கொலை செய்து கொள்ள முடியவில்லை. மர்மஆசாமி வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கி விட்டு குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்ததாக கணவரிடம் கூறினேன். அவரும் நம்பி விட்டார்.

ஆனால் எனது மாமியார் அளித்த புகாரின் பேரில் போலீசார் என்னை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். முதலில் குழந்தையை கொல்லவில்லை என்று மறுத்தேன். ஆனால் கணவர் மீதுள்ள சந்தேகத்தில் நான் தான் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

இவ்வாறு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.