ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் இல்லை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ‘பகீர்’ தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 27 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபட் பயாஸ், ரவிச்சந்திரன். இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அந்த அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, தமிழக அமைச்சரவை 9-ந்தேதி கூடி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நிராகரிக்க முடியாது
இது குறித்து, சட்ட வல்லுனர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அதில் சிலர், 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று கருத்தை தெரிவித்தனர்.
‘தீர்மானத்தில் சந்தேகம் இருந்தால் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கலாம். இதற்கான விளக்கத்தை தமிழக அமைச்சரவை அளித்த பின்னர், அந்த தீர்மானத்தை கவர்னர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை நிராகரிக்க முடியாது. ஒருவேளை இத்தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க விருப்பமில்லை என்றால் காலதாமதம் செய்யலாம்’, என்று கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
சர்வதேச சதி
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கில் நளினி உள்பட 7 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன்பின்னர் நீதிபதி எம்.சி.ஜெயின் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், ராஜீவ்காந்தி கொலையில் இருக்கும் சர்வதேச சதி குறித்து விசாரிக்க பரிந்துரை செய்தது.
அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையில் பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் மத்திய அரசு உளவுப்பிரிவு அதிகாரிகளும் இடம்பெற்றனர். தற்போது இந்த தனிப்பிரிவு போலீசார் சர்வதேச அளவில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சர்வதேச சதியில் தொடர்புடைய பலர் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை பிடித்து விசாரணை செய்யவேண்டிய நிலை தொடருகிறது.
அதிகாரம் இல்லை
இந்த சூழ்நிலையில் 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ராஜீவ்காந்தி கொலையில் சர்வதேச தொடர்புகள் உள்ளன. எனவே இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுப்பதற்கு முன்னதாக, மத்திய அரசிடம் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிச்சயம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்.