8 வழி சாலைக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக சேலம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஏராளமான நிலங்களை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக நிலங்களை அளவீடு செய்து கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த திட்டத்துக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் என்றும் பா.ம.க. இளைஞர் அணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தின் உரிமையாளர்கள் யாரையும் அப்புறப்படுத்தக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘ஐகோர்ட்டு உத்தரவுக்கு புறம்பாக சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மரங் களை வெட்ட மாட்டோம் என்று அதிகாரிகள் ஐகோர்ட்டில் உத்தரவாதம் அளித்து விட்டு பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டி வருகின்றனர்’ என்று தெரிவித்தனர். பின்னர், மரங்களை வெட்டுவது தொடர்பான புகைப்படங் களையும் அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
அப்போது நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு உத்தரவை மீறி அதிகாரிகள் செயல்படுவது கண்டனத்துக்குரியது’ என்றனர். விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிலம் கையகப் படுத்துதல் தொடர்பாகவும், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை சர்வே செய்து சப்-டிவிஷன் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் விவரங் கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த நீதிபதிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் நீதிபதிகள், ‘நிலங் களை கையகப்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே இந்த கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று ஏற்கனவே நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் நிலங்களை சர்வே செய்து சப்-டிவிஷன் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளதே?’ என்று கேள்வி எழுப்பினர்.
ஐகோர்ட்டில் அளித்த உத்தரவாதத்துக்கு புறம்பாக தமிழக அரசு செயல்படுகிறது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
‘வழக்கு விசாரணையின் போது அதிகாரிகள் சில உத்தரவாதங்களை அளித்து விட்டு அதற்கு மாறாக செயல்படுவது ஏற்புடையது அல்ல. அதிகாரிகள் தங்கள் இஷ்டப்படி செயல்பட்டால் 8 வழி சாலை திட்ட பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்க நேரிடும்’ என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
‘8 வழி சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் உள்ள மரங்களை உடனடியாக வெட்டி எடுத்துச்செல்லுங்கள். அப்போது தான் அதிக பணம் கிடைக்கும்’ என்று அதிகாரிகள் தவறான தகவலை கூறி நில உரிமையாளர்களை நிர்ப்பந்தம் செய்வதாக மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள் கூறினர்.
அதிகாரிகளின் சொந்த நிலங்களாக இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வார்களா? என்றும், அதிகாரிகளின் நிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களுக்கு பாதிப்பு தெரியும் என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர், 8 வழி சாலை பணிக்காக மரங்களை வெட்ட மாட்டோம் என்று அரசு ஐகோர்ட்டில் ஏற்கனவே அளித்துள்ள உத்தரவாதத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் தெரிவித்தனர்.
இதன்பின்னர், 8 வழி சாலை திட்டப்பணிக்காக தமிழக அரசு நில அளவீடு செய்தது, ஏற்கனவே நிலங்களை கையகப்படுத்தியது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தனர்.