Breaking News
பிரேசில் தேர்தலில் திடீர் திருப்பம்: முன்னாள் அதிபர் லுலா போட்டியில் இருந்து விலகல்

பிரேசில் நாட்டில் தற்போது மிச்செல் டெமர் அதிபராக உள்ளார். அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில், தற்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் அதிபர் லுலா (வயது 72) போட்டியிட விரும்பினார். ஆனால் அவர் தண்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை செய்துவிட்டது. ஆனால் அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டு விட்டார். அவர் தனது தொழிலாளர் கட்சி சார்பில் பெர்னாண்டோ ஹத்தாத் என்பவரை களம் இறக்குகிறார். இது குறித்து சிறையில் இருந்தவாறு அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “அக்டோபர் 7-ந் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. பெர்னாண்டோ ஹத்தாத் எனது பிரதிநிதியாக தேர்தல் களத்தில் இருப்பார். நமது வேட்பாளர் பெர்னாண்டோ ஹத்தாத்” என கூறி உள்ளார்.

ஏற்கனவே சமூக தாராளவாத கட்சி வேட்பாளர் ஜெயிர் போல்சொனரோ (63), கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.