அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை குறைந்தது
கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்துள்ளது.
2016 ம் ஆண்டில் 11.72 லட்சமாக இருந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2017 ம் ஆண்டில் 5 சதவீதம் குறைந்து 11.14 லட்சமாகி உள்ளது. அமெரிக்காவிற்கான தேசிய சுற்றுலா மற்றும் வர்த்தக அலுவலகம் (என்டிடிஓ) வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா வரும் வெளிநாட்டினர் குறித்த புள்ளிவிபரங்களை வெளியிடுவதை ஏப்ரல் மாதத்தில் என்டிடிஓ, தற்காலிகமாக நிறுத்தி இருந்தது. இந்நிலையில் 2017 ல் அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்த விபரத்தை மட்டும் என்டிடிஓ வெளியிட்டுள்ளது.
2016 வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்த அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது தனிநபர், வர்த்தம், தொழிலதிபர் உள்ளிட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 முதல் 2022 வரை அமெரிக்கா வரும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் என்டிடிஓ தெரிவித்துள்ளது.