பண்டிகை காலம் துவக்கம் பதுக்கல் தடுக்கப்படுமா?
டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், பண்டிகை சீசனும் துவங்க உள்ளதால், உணவு பொருட்கள் பதுக்கலை தடுத்து, விலையை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சர்வதேச நிலவரங்களால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து
வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையான, விநாயகர் சதுர்த்தி, நேற்று கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என, தொடர்ந்து, பண்டிகைகள் வர உள்ளன. இதனால், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, உணவு பொருட்களின் விலையை, சிலர் செயற்கையாக உயர்த்த வாய்ப்புள்ளது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உணவு துறையின் கீழ், விலைவாசி கண்காணிப்பு குழு உள்ளது. உணவு துறை அமைச்சர் தலைமையில் செயல்படும், அக்குழுவில், கூட்டுறவு, உணவு, வேளாண் உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உள்ளனர். அவர்கள், அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் விலையை கண்காணித்து, விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பர்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, தற்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
பண்டிகை சீசனும் வர உள்ளதால், அப்போது, அதிக விலைக்கு விற்க, தற்போதே, உணவு தானியங்களை பதுக்க வாய்ப்புள்ளது.இதனால், அவற்றின் விலையும் உயரும். அதை தடுப்பதற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மொத்த விலை காய்கறி, மளிகை சந்தைகளுக்கு, விலைவாசி கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி, அரசு தொடர் ஆய்வில் ஈடுபட வைக்க வேண்டும்.
ஆய்வு தொடர்பான விபரங்களை, அதிகாரிகளிடம் பெற வேண்டும். இதன் வாயிலாக, வரும் பண்டிகை மற்றும் மழை காலங்களில், உணவு பொருட்களின் விலை உயராமல் தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.