Breaking News
அமெரிக்காவை தாக்கியது ‘புளோரன்ஸ்’ புயல்

அமெரிக்காவை ‘புளோரன்ஸ்’ புயல் தாக்கியது. ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. பல லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலின் வட மேற்கு பகுதியில் ஒரு புயல் சின்னம் உருவானது. இந்தப் புயல் ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்டது.

இந்த ‘புளோரன்ஸ்’ புயல், அமெரிக்காவின் கிழக்கு கடலோரப்பகுதிகளை நேற்று தாக்கத் தொடங்கியது. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மாகாணங்களின் உள்புற பகுதிகளை நோக்கி இந்தப் புயல் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.

இந்தப் புயல் மிகவும் ஆபத்துகளை விளைவிக்கும் என கூறி 4-வது பிரிவில் முதலில் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது 3-வது பிரிவுக்கும், 2-வது பிரிவுக்கும் தரம் இறக்கப்பட்டு இறுதியில் தர வரிசையில் 1-வது பிரிவில் வைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இந்தப் புயல் உயிராபத்துகளை பெருமளவில் ஏற்படுத்தும், வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தப் புயல் பெரும் அழிவை ஏற்படுத்தும் என வடக்கு கரோலினா மாகாண கவர்னர் ராய் கூப்பர் எச்சரித்து உள்ளார்.

‘புளோரன்ஸ்’ புயல் கைவரிசை காட்டத்தொடங்கி உள்ளதால், வடக்கு கரோலினா மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கி உள்ளது. பெரும் வெள்ளமும் ஏற்பட்டு உள்ளது. இங்கு கடல் நீர், ஊருக்குள் புகுந்து உள்ளது.

இந்த மாகாணத்தில் 1½ லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. இருப்பினும் 30 லட்சம் வீடுகள், நிறுவனங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாக மின்சக்தி நிறுவனங்கள் கூறுகின்றன. மின்சாரம் துண்டிக்கப்பட்ட இடங்களில் மின்சார வினியோகம் சீராவதற்கு சில நாட்கள் அல்லது வாரங்கள்கூட ஆகலாம் என அதிகாரிகள் எச்சரித்தனர். பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

1,400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அமெரிக்காவின் பிற மாகாணங்களில் இருந்து நெருக்கடி கால பணியாளர்கள், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மாகாணங்களுக்கு விரைகின்றனர்.

இவ்விரு மாகாணங்களிலும் மட்டுமல்லாது வெர்ஜினியா மாகாணத்திலும் 17 லட்சத்துக்கும் அதிகமான மக்களை வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, வெர்ஜினியா, ஜார்ஜியா, மேரிலாந்து மாகாணங்களில் ‘புளோரன்ஸ்’ புயல் காரணமாக நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.