இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு – கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றியவர், நம்பி நாராயணன்(வயது 74). இவர், 1994-ல் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கேரள மாநில போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நம்பி நாராயணன் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அப்போது நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து சி.பி.ஐ. விடுவித்தது. மேலும் கேரள போலீஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக அவரை கைது செய்ததாகவும் கூறியது.
இந்த நிலையில் தன்னை தேவையின்றி கைது செய்து, சித்ரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கிய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நம்பி நாராயணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து 1998-ல் நம்பி நாராயணன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு இடைக்கால நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல் தேசிய மனித உரிமை கமிஷன் 2001-ல் ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடையே, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் “நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டது, தேவையற்றது. அவர் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவருக்கு நஷ்டஈடாக கேரள அரசு ரூ.50 லட்சத்தை 8 வாரத்துக்குள் வழங்கவேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் இந்த வழக்கில் கேரள போலீசாரின் பங்கு பற்றி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவையும் அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நம்பி நாராயணன் வரவேற்றுள்ளார். இந்த உத்தரவு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எனினும், கேரள போலீசார் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழு குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என்றார்.