7 பேர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ்காந்தி குடும்பத்தினரே ஆட்சேபனை தெரிவிக்கவில்லை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல்.காலனியில் காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறக்கப்பட்டது.
விழாவுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். பின்னர் குத்துவிளக்கேற்றி வைத்த அவர், அங்காடியை பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக நியாயவிலை கடைகளின் அருகில் 100 சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை 4 கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டு உள்ளது.
5-வதாக நந்தம்பாக்கத்தில் திறக்கப்பட்டு உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேலும் 4 கடைகள் திறக்கப்பட உள்ளது. கூட்டுறவு சிறப்பு அங்காடிகளில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 300 வகையான மளிகை மற்றும் அழகுசாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். தமிழர்களின் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் தி.மு.க.வே கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக 7 பேரை விடுதலை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே கொலை குற்றவாளி. இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா.
தற்போது சுப்ரீம்கோர்ட்டு தந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதை ஒவ்வொரு தமிழர்களும் வரவேற்கின்றனர். ராஜீவ்காந்தி குடும்பமே 7 பேரை விடுதலை செய்ய ஆட்சேபனை இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் வேறு யாராவது எந்த கருத்து கூறினாலும் கவலையில்லை.
கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களின் சம்பள உயர்வு பற்றி முதல்-அமைச்சரிடம் பேசி ஊழியர்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு சம்பளம் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் கூட்டுறவு சங்க அதிகாரிகள் பாபு, சந்திரசேகர், கூட்டுறவு சங்க தலைவர்கள் பரணிபிரசாத், என்.பி.கிருஷ்ணன், வைரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.