பிளஸ்-2 மார்க் அடிப்படையில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு அறிவிப்பு
தமிழக கல்வி திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்தது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்து பிளஸ்-1 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு அதற்கான பாடத்தை நடத்தாமல், அப்போதே பிளஸ்-2 வகுப்புக்கான பாடத்தை பெரும்பாலான பள்ளிகள் நடத்த தொடங்கிவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வை அறிமுகம் செய்ய பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டது. கடந்த கல்வியாண்டு முதல் அந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டது.
அதாவது, பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, பிளஸ்-1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பிளஸ்-1-க்கு 600 மதிப்பெண்களும், பிளஸ்-2-க்கு 600 மதிப்பெண்களும் என்று பிரிக்கப்பட்டது.
பிளஸ்-2 முடித்து மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை சேர்த்து கணக்கில் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது. ஆனால் தற்போது அந்த முடிவை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு எடுக்கும் மார்க்கின் அடிப்படையிலேயே உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், பிளஸ்-1 மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களுக்கு தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக அரசாணை திருத்தி வெளியிடப்பட்டு இருக்கிறது.
திருத்தப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பிளஸ்-1 அல்லது பிளஸ்-2 பொதுத்தேர்விலோ அல்லது 2 பொதுத்தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் நேரத்தில், அவ்விரு பொதுத்தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறும் வரை மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மட்டும் பதிவு செய்து மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்.
மாணவர்களின் நலன் கருதி, பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை மட்டும் உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-
10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு 3 பொதுத்தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டி இருக்கிறது. இதற்கு முன்பு பிளஸ்-1 பொதுத்தேர்வு இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போது அதுவும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கிறது.
இப்படியாக தொடர்ந்து தேர்வு என்பதால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1,200 மதிப்பெண்கள் என்றிருப்பதை 600 மதிப்பெண்களாக குறைத்திருக்கிறோம். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் தங்களுக்குரிய 600 மதிப்பெண்களிலேயே உயர்கல்விக்கு செல்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
எனவே இனி பிளஸ்-2 மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல 1,200 மதிப்பெண்கள் தேவையில்லை, 600 மதிப்பெண்கள் போதுமானது. இதனால் மாணவர்களும் உற்சாகம் அடைவார்கள். கடந்த ஆண்டு பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும். அதேபோல், கடந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வு எழுதியவர்களுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வில் எந்த தடையும் இல்லை. பிளஸ்-1 தேர்வு தொடர்ந்து நீடிக்கும். மேலும் பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தால் அந்த பாடங்களை எழுதிக்கொண்டே பிளஸ்-2 வகுப்பில் தொடர்ந்து படிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் 413 மையங்களில் ‘ஸ்பீடு’ நிறுவனம் மூலம் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி தொடங்கி உள்ளது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிக்கு 23 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? இல்லையா? என்ற குழப்பம் நிலவி வந்ததால் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்தனர். இதனால் இதில் 1,475 மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். அதில் 27 மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து உள்ளனர்.
சென்ற ஆண்டு தமிழ் மொழியாக்கத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் நீட் தேர்வு கேள்விகளில் குழப்பம் ஏற்பட்டது. இந்த ஆண்டு அதுபோன்ற குறைபாடுகள் இல்லாத வகையில் மாநில அரசு இணைந்து செயல்படும்.
நீட் தேர்வுக்கான மையங்களுக்கு மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தை காட்டி சென்ற ஆண்டு வேறு மாநிலங்களில் மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு மாணவர்கள் வேறு மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாநிலத்தில் நீட் தேர்வு எழுத எத்தனை மையங்கள் வேண்டுமானாலும் அமைத்து தருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.