பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு விண்ணில் பாய்கிறது
ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டுக்கான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அது விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய மற்றும் வெளிநாடுகளின் செயற்கைகோள்கள் இந்திய ராக்கெட்டுகள் மூலம் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் இன்று இரவு 10 மணி 7 நிமிடங்களில் விண்ணில் ஏவப்படுகிறது. இதில் இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான நோவாசர் மற்றும் எஸ்1-4 என்ற செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
நோவாசர் செயற்கைகோள் வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்புக்கும், எஸ்1-4 செயற்கைகோள் இயற்கை வளம், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகரப்புற மேலாண்மை ஆகியவற்றின் பயன்பாட்டுக்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
நோவாசர் 445 கிலோவும், எஸ்1-4 444 கிலோவும் எடை கொண்டவை. பூமியில் இருந்து செலுத்தப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த இரு செயற்கைகோள்களும் 583 கிலோ மீட்டர் உயரத்தில், பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
இதற்காக 3 நிலைகளை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது.
இது இந்தியாவின் 44-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 33 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (சனிக்கிழமை) பகல் 1 மணி 8 நிமிடத்தில் தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை தீவிரமாக விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணி 7 நிமிடங்களில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதால், சென்னைவாசிகள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்தபடியே ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப் பாய்வதை காணலாம்.
வானம் மேக மூட்டம் இல்லாமல் தெளிவாக இருந்தால், பொதுமக்கள் அனைவரும் இதனை கண்டுகளிக்க முடியும். இது வானில் ஒரு வர்ண ஜாலம் போல் காட்சி அளிக்கும்.
மேற்கண்ட தகவலை இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.