சிசிடிவி கேமரா குறித்த விழிப்புணர்வு படம்: காவல் ஆணையர் வெளியிட நடிகர் விக்ரம் பெற்றுக்கொண்டார்
சிசிடிவி கேமராக்கள் நிறுவுவது குறித்த விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் எனவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் கேட்டுக் கொண்டார்.
மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் கடந்த ஜூன் 28 அன்று அண்ணாநகர் டவர் பூங்காவிலும், ஜூலை 7 அன்று சைதாப்பேட்டையிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார். பின்னர், காவல் ஆணையர் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் துணை ஆணையர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், அனைத்து காவல் மாவட்டங்கள், பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டும் வருகிறது.
மேலும், காவல் ஆணையாளர் அவர்கள் கடந்த ஜூலை 7 2018 அன்று காவல் ஆணையரகத்தில், சென்னையின் வடக்கு, மத்திய மற்றும் தெற்கு தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகளுடன் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து கலந்தாய்வு நடத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்னையில் பொது இடங்களில் சிசிடிவிக்கள் நிறுவ தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்குவதாக தெரிவித்தனர்.
காவல் ஆணையர் ஆலோசனையின் பேரில், திரைப்பட நடிகர் விவேக் தயாரித்து நடித்த மூன்றாவது கண் என்ற சிசிடிவி விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆக.4.2018 அன்று வெளியிட நடிகர் விவேக் பெற்றுக் கொண்டார்.
சென்னை காவல் ஆணையரின் சீரிய முயற்சியின் பயனாக அநேக இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வீடு மற்றும் வீட்டையொட்டிய தெருக்களில் சிசிடிவிக்கள் நிறுவினர். மேலும், இதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு, காவல் ஆணையரின் ஆலோசனையின்பேரில், நடிகர் விக்ரம் நடிப்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து ’’மூன்றாவது கண்’’ என்ற விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டது.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், நடிகர் விக்ரம் நடித்த ’’மூன்றாவது கண்’’ விழிப்புணர்வு குறும்படத்தின் முதல் பிரதியை இன்று காவல் ஆணையரகத்தில் வெளியிட நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார். மேலும், சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் சிறப்புரையாற்றி, இதன் வெற்றி பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு, சென்னை நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வழிவகை செய்ய வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் மகேஷ்குமார் அகர்வால், (தெற்கு), தினகரன், (வடக்கு), ஏ.அருண், (போக்குவரத்து),.எம்.டி.கணேசமூர்த்தி (மத்திய குற்றப்பிரிவு) உட்பட உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.