அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு
அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை புளோரன்ஸ் புயல் வலுவிழந்த போதும், முதலாம் வகை புயலாக மாறியிருப்பதால் அமெரிக்காவின் பல பகுதிகளில் விடாது மழை பெய்து வருகிறது.
இதையடுத்து 3 மாகாணங்களிலும் உள்ள கடலோர பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். கிழக்கு பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக சுமார் 5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. ”தொடர்ந்து புயல் வீசி வருகிறது. ஆறுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடும் நிலையில், நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. வடக்கு கரோலினா மாகாணமே பேரழிவை சந்தித்துள்ளது” என அம்மாகாணத்தின் கவர்னர் ரோய் கூப்பர் கூறியுள்ளார்.
வடக்கு கரோலினா மாகாணத்தின் நியூ பெர்ன் சிட்டியில் புயலால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. பலர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். புயலால் தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, விர்ஜீனியா மாகாணம், மேரிலேண்ட், நியூயார்க் நகரங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. புயலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே சுமார் 100 கிமீ வேகத்தில் வீசும் புளோரன்ஸ் புயலால், கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்து, கரையோர பகுதிகளை தாக்கியதால் சாலைகளில் கடல்நீர் புகுந்து வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதனால் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 1500க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை பாதுகாக்க ஹெலிகாப்டர்கள், படகுகள் உதவியோடு சுமார் 9700 தேசிய பேரிடர் மீட்புக்குழு வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் பார்வையிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.