இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் – பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது
‘ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற மிகச்சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்’ என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கை 37.1 ஒவர்களில் 116 ரன்னில் சுருட்டியதுடன், வெற்றி இலக்கை 23.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் உஸ்மான்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அடுத்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவை எதிர்கொள்கிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு ஆளாகி இருக்கும் இந்த போட்டி துபாயில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
ஹாங்காங்கை துவம்சம் செய்து முதல் வெற்றியை ருசித்த பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த பேட்டியில், ‘இந்த போட்டியில் முழுமையான ஆட்ட திறனை வெளிப்படுத்தினோம். இருப்பினும் இன்னும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த போட்டி தொடரில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் நாங்கள் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டும்.
அத்துடன் நாங்கள் தொடக்கத்திலேயே விக்கெட்டை வீழ்த்தி இருக்க வேண்டும். தொடக்கத்தில் பந்து ஸ்விங் ஆகவில்லை. இதனை நாங்கள் எச்சரிக்கை மணியாக எடுத்து கொண்டுள்ளோம். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு இதனை சரிசெய்ய எங்களுக்கு நேரம் இருக்கிறது. இந்த வெற்றி நல்லதாகும். ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாங்கள் எங்களுடைய மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.