ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: 370 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதும் 370 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் ஒரு வாரத்துக்குப் பிறகு தெரியவந்துள்ளது.
தலைநகர் டெல்லி, அமெரிக்காவின் நியூயார்க் இடையே ஏர் இந்தியா விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானத்தின் பயண நேரம் 15 மணி நேரமாகும். கடந்த 11-ம் தேதி 370 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நியூயார்க் சென்றது. ஆனால் அந்த நேரத்தில் மோசமான வானிலை நிலவியதால் நியூயார்க்கில் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தது.
மேலும் விமானத்தின் தகவல் தொடர்பு சாதனங்களிலும் கோளாறு ஏற்பட்டது. ஒரே ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே செயல்பட்டது. அதன்மூலமாக நியூயார்க் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.
மோசமான வானிலையில் விமானத்தை ஓடுபாதையில் தரையிறக்க உதவும் ஐஎல்எஸ் என்ற 3 முக்கிய கருவிகளும் விமானத்தில் செயல்படவில்லை. தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்ததால் விமானத்தின் எரிபொருளும் கணிசமாக தீர்ந்தது. இதனால் அருகில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தை திருப்பிவிடவும் வாய்ப்பில்லாமல் போனது.
வேறு வழியின்றி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தை தரையிறக்க கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர். விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு பத்திரமாக விமானத்தை தரையிறக்கினர். இதனால் 370 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விமான போக்குவரத்து தொடர்பான செய்திகளை வழங்கும் முன்னணி இணைய ஊடகம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. எனினும் இதுதொடர்பாக ஏர் இந்தியா தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.