நிர்மலா சீதாராமனை கொல்லப்போவதாக வாட்ஸ்-அப்பில் தகவல்: உத்தரகாண்டில் 2 பேர் கைது
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் சேவை தினமாக கொண்டாடப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் பிதோராகார் மாவட்டம் தார்சுலா நகரில் ராணுவத்தினர் ஏற்பாடு செய்த மருத்துவ முகாமை மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கிவைத்தார்.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் அந்த நகருக்கு வருகைதர இருப்பதை அறிந்த ஒருவர் தனது வாட்ஸ்-அப் குரூப்பில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சர்ச்சைக்குரிய ஒரு தகவலை அனுப்பினார். அதில், ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார்.
அதற்கு மற்றொருவரும் பதில் அளித்து, இதுதொடர்பாக 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதை கண்டுபிடித்த உளவுத்துறையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து எச்சரித்தனர். போலீசார் அந்த 2 பேரையும் கண்டுபிடித்து நேற்று காலை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
அந்த வாட்ஸ்-அப் குரூப்பின் நிர்வாகி (அட்மின்) பற்றியும் விசாரணை நடக்கிறது. கைதான 2 பேருக்கும் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா?, அவர்களிடம் துப்பாக்கி உள்பட ஆயுதங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் குடிபோதையில் இவ்வாறு தகவல்களை பரிமாறிக் கொண்டது தெரியவந்தது. ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராம்சந்திரா ராஜ்குரு தெரிவித்தார்.