நிலவிற்கு முதல் முறையாக செல்லும் சுற்றுலா பயணி ஜப்பான் கோடீசுவரர்
இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் நடந்த விழாவில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. நிலவிற்கு செல்ல போகும் ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா உலகம் முழுக்க வைரலாகி உள்ளார்.
‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக சந்திரனுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், சந்திரனின் உட்புறத்தில் மிக தீவிரமான ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘ஸ்பேஸ் எக்ஸ்’ எனும் தனியார் நிறுவனம் சுற்றுலாப் பயணிகளை சந்திரனுக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக ’பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட்டை அந்நிறுவனம் தயாரிக்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் சந்திரனுக்கு முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் நிறுவனம் என்ற பெருமையை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ பெறும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சந்திரனுக்கு 2 சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வைக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017-ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. அவர்களின் கணக்குப்படி இந்த வருடம் மனிதர்களை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று வரை மனிதர்களை அனுப்பவில்லை. ஆனால் தற்போது ”பிக் பல்கான் ஹெவி” ராக்கெட் மூலம் மனிதர் ஒருவரை நிலவிற்கு அனுப்ப உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்று முறையான அறிவிப்பை வெளியிட்டது.
எலோன் மஸ்க் அந்த பெயரை வாசித்தார். பலருக்கும் அந்த பெயர் புரியவில்லை. ஒல்லியான தேகத்தில், எளிமையான உடையுடன் மேடைக்கு வந்தார் யுசாகு மேசாவா. இவர்தான் நிலவிற்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்ப போகும் அந்த நபர் என்றார் எலோன் மஸ்க். அதாவது உலகிலேயே முதல்முறையாக காசு கொடுத்து நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர் இவர்தான்.
யுசாகு மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போன்ற ”சோசோடவுன்” என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜப்பானில் இதுதான் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். அதேபோல் பல்வேறு பவுண்டேஷன், கலை பொருள் சேமிப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார் யுசாகு மேசாவா.
ஆனால் இவர் நிலவிற்கு செல்லும் இந்த திட்டத்தில் சிறிய மாற்றம் ஒன்றை செய்து இருக்கிறார்கள். அதன்படி, நிலவிற்கு இவர் இந்த வருடம் அனுப்பப்படமாட்டார். அதற்கு பதிலாக 2023-ல்தான் இவர் நிலவிற்கு செல்ல இருக்கிறார். பல்கான் பிக் ஹெவி ராக்கெட் மூலம் இவர் நிலவிற்கு சென்று, நிலவில் கால் பதிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக டியர் மூன் என்ற இணைய பக்கத்தை தொடங்கி உள்ளார் யுசாகு மேசாவா. இதில் அதுகுறித்து தகவல்கள் அனைத்தையும் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். அதேபோல் நிலவில் டியர் மூன் என்றும் எழுத போவதாக அவர் கூறியுள்ளார். மேலும் விரைவில் சில அதிரடி திட்டங்களை அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.