போலீசில் புகார் அளித்ததால் விரக்தி: தீக்குளித்த நடிகையின் காதலன் சாவு
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நிலானி. சின்னத்திரை நடிகையான இவர் ‘ஸ்டெர்லைட்’ போராட்டத்தின் போது போலீஸ் சீருடை அணிந்து சர்ச்சை கருத்துகளை தெரிவித்து கைதானவர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இவரும், வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த காந்தி லலித்குமார் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் மயிலாப்பூர் முண்டகக்கன்னி அம்மன்கோவில் அருகே நிலானி நடித்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்கு காந்தி லலித்குமார் வந்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி நிலானியிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். படக்குழுவினர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்.
இந்தநிலையில் நடிகை நிலானி மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் காந்தி லலித் குமார் மீது புகார் அளித்தார். அதில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காந்தி லலித்குமார் மிரட்டி வருவதாக கூறியிருந்தார். இதனால் காந்தி லலித்குமார் விரக்தி அடைந்தார்.
நேற்றுமுன்தினம் அவர் திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் அவர் தீக்குளித்ததை கண்டு சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் காந்தி லலித்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதுதொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தீக்குளிப்பதற்கு முன்பு காந்தி லலித்குமார் கடிதம் ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.