ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணியை பந்தாடியது இந்தியா
6 அணிகள் இடையிலான 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய 5-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மல்லுகட்டின. பரம எதிரிகள் மோதியதால் மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இந்திய அணியில் முந்தைய ஆட்டத்தில் ஆடிய கலீல் அகமது, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பும்ரா, ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டனர். லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பஹார் ஜமானும், இமாம் உல்-ஹக்கும் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள். ‘ரன்மழை பொழியும் ஜோடி’ என்று வர்ணிக்கப்படும் இவர்கள் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கொடுத்த நெருக்கடியில் மிரண்டனர். புவனேஷ்வர்குமாரின் பந்து வீச்சில் இமாம் உல்-ஹக் (2 ரன்) சில அடி முன்னேறி சென்று அடித்த போது பந்து பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. புவனேஷ்வர்குமாரின் மற்றொரு ஓவரில் ‘ஷாட்பிட்ச்’ பந்தை துல்லியமாக கணிக்காமல் தூக்கியடித்த பஹார் ஜமான் (0) சாஹலிடம் கேட்ச் ஆனார். 3 ரன்னுக்குள் 2 விக்கெட் சரிந்ததால் பாகிஸ்தான் அணி திகைத்து போனது.
இதன் பின்னர் பாபர் அசாமும், மூத்த வீரர் சோயிப் மாலிக்கும் இணைந்து அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். மாலிக் 26 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை டோனி நழுவ விட்டார். அணியின் ஸ்கோர் 85 ரன்களாக உயர்ந்த போது (21.2 ஓவர்) பாபர் அசாம் (47 ரன், 62 பந்து, 6 பவுண்டரி) குல்தீப் யாதவின் சுழலில் கிளன் போல்டு ஆனார்.
இந்த ஜோடி பிரிந்ததும் பாகிஸ்தான் மறுபடியும் தகிடுதத்தம் போட்டது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவின் பந்து வீச்சில் அவர்கள் வெகுவாக தடுமாறினர். 4-வது விக்கெட்டுக்கு வந்த கேப்டன் சர்ப்ராஸ் அகமது (6 ரன்), ஜாதவின் பந்து வீச்சில் தூக்கியடித்த போது, எல்லைக்கோடு அருகே ஓடி வந்த மாற்று ஆட்டக்காரர் மனிஷ் பாண்டே சூப்பராக கேட்ச் செய்தார். பந்தை பிடித்ததும் நிலை கொள்ள முடியாமல், பந்தை மேல்வாக்கில் தூக்கி போட்டு விட்டு எல்லைக்கோட்டை தாண்டிய மனிஷ்பாண்டே அதன் பிறகு மீண்டும் உள்ளே நுழைந்து கேட்ச் செய்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சோயிப் மாலிக் 43 ரன்களில் (67 பந்து, 1 பவுண்டரி, ஒரு சிக்சர்) அம்பத்தி ராயுடுவினால் ரன்-அவுட் செய்யப்பட்டார்.
இதன் பிறகு இந்தியாவின் ‘பிடி’ வலுவடைய, பாகிஸ்தானால் நிமிரவே முடியவில்லை. ஆசிப் அலி (9 ரன்), ஷதப் கான் (8 ரன்), பஹீம் அஷ்ரப் (21 ரன்), ஹசன் அலி (1 ரன்), உஸ்மான் கான் (0) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேற்றப்பட்டனர். முடிவில் பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது. முகமது அமிர் 18 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இந்திய பீல்டர்கள் 3-4 கேட்ச்சுகளை தவற விட்டனர். இல்லாவிட்டால் பாகிஸ்தான் இதை விட குறைந்த ஸ்கோரில் முடங்கியிருக்கும். இருப்பினும் இந்த மைதானத்தில் அந்த அணியின் மோசமான ஸ்கோராக இது பதிவானது. இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 207 ரன்கள் எடுத்ததே இங்கு பாகிஸ்தானின் குறைந்த ஸ்கோராக இருந்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர்குமார், கேதர் ஜாதவ் தலா 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து சுலபமான இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் நிதானமாக ஆடினர். முதல் 6 ஓவர்களில் இந்தியா 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. தங்களது நிலை நிறுத்திக்கொண்ட பிறகு இருவரும் ‘ரன்வேட்டை’யை தொடங்கினர். உஸ்மான் கானின் ஒரே ஓவரில் ரோகித் சர்மா, 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். 36 பந்துகளில் அவர் அரைசதத்தை கடந்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் அதிவேக அரைசதம் இதுவாகும்.
இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் (13.1 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரோகித் சர்மா 52 ரன்களில் (39 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். தவான் தனது பங்குக்கு 46 ரன்கள் (54 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.
இதன் பிறகு அம்பத்தி ராயுடு (31 ரன்), தினேஷ் கார்த்திக் (31 ரன்) இருவரும் கைகோர்த்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளியது. முதல் ஆட்டத்தில் ஹாங்காங்கை போராடி வீழ்த்திய இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். பாகிஸ்தானுக்கு முதல் தோல்வியாகும். ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அடுத்து சூப்பர்-4 சுற்றில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.
ஆட்டநாயகன் புவனேஷ்வர்குமார்
இந்த ஆட்டத்தில் 7 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹர்திக் பாண்ட்யா முதுகுவலியால் அவதி – மைதானத்தில் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், 18-வது ஓவரின் போது இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயத்தில் சிக்கினார். இந்த ஓவரில் 5-வது பந்தை வீசிய ஹர்திக் பாண்ட்யா, அதன் பிறகு நிற்க முடியாமல் தடுமாறி மைதானத்தில் விழுந்தார். நீர்சத்து குறைபாட்டினால் அவர் நிலைகுலைந்ததாக முதலில் கருதப்பட்டது. ஆனால் முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருப்பது அதன் பிறகு தெரிய வந்தது. உடனடியாக ஸ்டிரச்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே தூக்கி செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் இந்திய கிரிக்கெட் மருத்துவ குழு வெளியிட்ட அறிக்கையில், ‘ஹர்திக் பாண்ட்யா முதுகின் அடிப்பகுதியில் வலியால் அவதிப்படுகிறார். தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. அவரது காயத்தன்மை குறித்து கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஓவரின் எஞ்சிய ஒரு பந்தை அம்பத்தி ராயுடு வீசினார். அவருக்கு பதிலாக மனிஷ் பாண்டே பீல்டிங் பணியை கவனித்தார். 4.5 ஓவர்கள் வீசிய பாண்ட்யா 24 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் அவர் ஆடுவது சந்தேகம் தான்.