‘ஆப்கானிஸ்தான் அணியை போல் எங்களாலும் எழுச்சி பெற முடியும்’ – ஹாங்காங் கேப்டன் அன்சூமான் ராத் நம்பிக்கை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று முன்தினம் துபாயில் நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் சேர்த்தது. ஷிகர் தவான் (127 ரன்) சதம் அடித்தார். அடுத்து களம் இறங்கிய ‘கத்துக்குட்டி’ அணியான ஹாங்காங்கின் தொடக்க ஆட்டக்காரர்கள் நிஜாகட் கான் (92 ரன்கள்), கேப்டன் அன்சூமான் ராத் (73 ரன்கள்) முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் (34.1 ஓவர்களில்) குவித்து இந்திய அணியை கதிகலங்க வைத்தனர். தொடக்க ஜோடி வீழ்ந்த பிறகே ஆட்டம் இந்திய அணிக்கு அனுகூலமானது. பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ஹாங்காங் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
தோல்விக்கு பிறகு ஹாங்காங் அணியின் கேப்டன் அன்சூமான் ராத் அளித்த பேட்டியில், ‘எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். இந்த ஆட்டத்தில் எங்களது வீரர்களின் செயல்பாடை நினைத்து பெருமிதம் அடைகிறோம். தொடக்கம் மகிழ்ச்சியாக அமைந்தாலும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும். நல்ல தொடக்கம் கிடைத்தும் மிடில் வரிசையில் விக்கெட்டுகளை வேகமாக இழந்ததால் இலக்கை எட்ட முடியாமல் போய்விட்டது.
இது போன்ற உயரிய ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டியது முக்கியம். ஆப்கானிஸ்தான் அணியை பாருங்கள். 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் அணியும் எங்களை போன்று தான் இருந்தது. நாங்கள் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சுருண்டது போல் தான் அவர்களும் 140, 150 ரன்களில் வீழ்ந்து விடுவார்கள். பின்னர் கடின உழைப்பு மூலம் நாளுக்கு நாள் முன்னேறி இப்போது நல்ல நிலைக்கு வந்து இருக்கிறார்கள். ஆசிய கோப்பை போட்டியில் ‘பி’ பிரிவில் அவர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர். அது போன்ற திறமை எங்களுக்கும் இருக்கிறது என்பதை இந்த போட்டியில் காட்டி இருக்கிறோம். அவர்களை போல் எங்களாலும் எழுச்சி பெற முடியும். மற்ற உறுப்பு நாடுகளிலும் இத்தகைய திறமை இருக்கிறது. வாய்ப்புகளை உருவாக்கி தந்து, அங்கீகரிக்க வேண்டும்’ என்றார்.