சூப்பர்-4 சுற்று அட்டவணை வெளியீடு: இந்தியா-பாகிஸ்தான் 23-ந்தேதி மீண்டும் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்னும் ஒரு லீக் சுற்று எஞ்சி இருக்கிறது. ‘பி’ பிரிவில் ஏற்கனவே அடுத்த சுற்றை எட்டிவிட்ட ஆப்கானிஸ்தான்- வங்காளதேச அணிகள் தங்களது கடைசி லீக்கில் அபுதாபியில் இன்று (மாலை 5 மணி) மோத இருக்கிறது. அதன் பிறகு தான் ‘பி’ பிரிவில் முதலிடம், 2-வது இடம் யாருக்கு என்பது தெரிய வரும். ஆனால் இந்த ஆட்டத்தின் முடிவு எப்படி இருந்தாலும் ‘பி1’ அந்தஸ்து ஆப்கானிஸ்தானுக்கும், ‘பி2’ அந்தஸ்து வங்காளதேசத்துக்கும் வழங்கப்படுவதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ‘ஏ’ பிரிவிலும் இதே பாணியை கடைபிடித்திருக்கும் (‘ஏ1’ இந்தியா, ‘ஏ2’ பாகிஸ்தான்) ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதன் அடிப்படையில் சூப்பர்-4 சுற்று மோதல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.
சூப்பர்-4 சுற்றில் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் முடிவில் டாப்-2 அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். மறுபடியும் மோத காத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-4 சுற்றில் வருகிற 23-ந்தேதி துபாயில் சந்திக்கின்றன.
போட்டி அட்டவணை குறித்து வங்காளதேச கேப்டன் மோர்தசா அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் நேற்று அளித்த பேட்டியில், ‘இரண்டு லீக்கிலும் வெற்றி பெற்றால் பி பிரிவில் முதலிடத்தை பிடித்து, ஏ பிரிவில் 2-வது இடத்தை பெறும் அணியுடன் முதலில் மோத வேண்டி இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி லீக்கில் நாங்கள் ஜெயித்தாலும், தோற்றாலும் பி பிரிவில் எங்களுக்கு 2-வது இடம் தான் என்று ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டதை இன்று (நேற்று) காலை தான் கேள்விப்பட்டேன். போட்டி அட்டவணை விதிமுறையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செய்திருக்கும் இந்த மாற்றம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது’ என்றார். இந்திய அணி அபுதாபிக்கு பயணிக்காமல் தொடர்ந்து துபாயிலேயே தங்கியிருந்து விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.