ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பெறப்பட்ட அறிக்கைகள் என்னென்ன?
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை அளித்துள்ள மருத்துவ அறிக்கையிலும், சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதா உடல்நிலை குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
இதுதொடர்பாக தெளிவான ஒரு விளக்கத்தை பெறுவதற்காக ஆணையத்தின் செயலாளர், கவர்னர் மாளிகை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை சம்பந்தமாக அரசு தரப்பில் இருந்தோ அல்லது அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் இருந்தோ எத்தனை மருத்துவக்குறிப்புகளை கவர்னர் மாளிகை பெற்றது?. அவ்வாறு பெறப்பட்ட மருத்துவ அறிக்கைகள் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யா சாகர்ராவுக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதா?.
அவ்வாறு தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதுதொடர்பாக கவர்னர் பதில் அளித்தாரா?. ஜெயலலிதாவை மருத்துவமனையில் கவர்னர் பார்த்தது தொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு, கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் அனுப்பப்பட்டதா?.
ஜெயலலிதாவின் உடல்நிலை, அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ நிர்வாகம், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் கவர்னர் மாளிகை இடையே கடிதத் தொடர்பு ஏதேனும் இருந்ததா?. அப்படி ஏதேனும் கடிதம் பெறப்பட்டிருந்தால் அதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகைக்கு தெரிவிக்கப்பட்டதா? என்பது தொடர்பான விளக்கத்தை ஆணையத்தில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு தனியாக ஒரு கடிதத்தை ஆணையம் அனுப்பி உள்ளது.
அதில், ‘ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை கண்காணிக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட 5 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பாக அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அளித்ததா?. அவ்வாறு அறிக்கை வழங்காமல் இருப்பின் அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சுகாதாரத்துறை, அமைச்சரவைக்கு அறிக்கை அனுப்பியதா?. ஜெயலலிதா உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து அவ்வப்போது அரசுக்கோ, கவர்னருக்கோ, மத்திய அரசுக்கோ, அப்போதைய பொறுப்பு முதல்வருக்கோ முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் அறிக்கை அளித்தாரா? என்பது குறித்த விளக்கத்தை ஆணையத்தில் அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.