மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை இலாகா எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை வடக்கு உள் கர்நாடகா மற்றும் ராயலசீமாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதேபோல் தமிழகத்திலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும், அது தீவிரமாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற கூடும்.
இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் நாளை (இன்று) காலை 65 கிலோ மீட்டர் முதல் 75 கிலோ மீட்டர் வரை வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் அந்தமான், தெற்கு வங்க கடல் பகுதிகளில் 20-ந்தேதி (இன்று) வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆந்திரா மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 21-ந்தேதி (நாளை) வரை செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அடுத்து வரும் 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் மிதமான மழை பெய்யும். மத்திய வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசாவை நோக்கி செல்வதால் தென் தமிழகத்துக்கு மழை இருக்காது.
தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து இதுவரை தமிழகத்தில் 27 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் தற்போதுவரை 23 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது இயல்பை விட 14 சதவீதம் குறைவு ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-
பள்ளிப்பட்டு, காஞ்சீபுரம், தாமரைப்பாக்கம், மாமல்லபுரத்தில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், செம்பரப்பாக்கம், விழுப்புரத்தில் தலா 4 செ.மீ., வானூர், மரக்காணம், செஞ்சி, மதுராந்தகம், பூண்டி, உத்திரமேரூர், திண்டிவனம், பூந்தமல்லி, கடலூர், திருவண்ணாமலை, சோழவரம், திருவள்ளூரில் தலா 3 செ.மீ.,
சென்னை விமானநிலையம், வாணியம்பாடி, வந்தவாசி, காவேரிப்பாக்கம், திருத்தணி, அரக்கோணம், தரமணி, மாதவரம், வடசென்னை, டி.ஜி.பி. அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரத்தில் தலா 2 செ.மீ. உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.