ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு
14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வங்காளதேச அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர்-4) முன்னேறின. தங்களது இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறின.
இந்த நிலையில் சூப்பர்-4 சுற்று இன்று தொடங்கியுள்ளது.
இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
சூப்பர்-4 சுற்றில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொண்டுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம் காட்டினார்கள். வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ், நுஸ்முல் ஹூசைன் 5.1 வது ஓவர்களுக்குள் தலா 7 ரன்களுடன் வெளியேறினர். இதனையடுத்து வங்காளதேச பேட்ஸ்மேன்கள் வலுவான கூட்டணியை அமைக்க இந்தியா அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து பின்வரிசையில் களமிறங்கிய வங்காளதேச வீரர்கள் ரன் சேர்த்தனர். 49.1 ஓவர்களை எதிர்க்கொண்ட வங்கதேச அணி 173 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக மெஹிதி ஹசன் மிராஸ் 42 ரன்களை எடுத்தார். இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியில் ஜடேஜா 4 விக்கெட்களை எடுத்தார். புவனேஷ்வர் குமார், பும்ரா தலா மூன்று விக்கெட்களை எடுத்தார்கள். 29 ரன்களை கொடுத்து 4 விக்கெட்களை எடுத்து ஜடேஜா அசத்தினார்.