தான்சானியாவில் படகு ஏரியில் விழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும். தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொரு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். அதிகளவிலான பயணிகளை ஏற்றி சென்றதால் எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்து 100-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டனர்.
அவர்களில் 32 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படகில் பயணம் செய்த மேலும் பலரை காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் ஈடுபடுவதில் சிக்கல் ஏற்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீட்பு பணி இன்று துவங்கியது. இந்தநிலையில், பலர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். இதில், மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. தண்ணீரில் மூழ்கிய 40க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மோசமான பராமரிப்பு மற்றும் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதால், லேக் விக்டோரியா ஏரியில் விபத்து ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக கூறப்படுகிறது. கடந்த 1996 ஆம் ஆண்டு இதே ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 800 பேர் பலியானது நினைவு கூறத்தக்கது. அதேபோல், 2011-ல் ஏற்பட்ட விபத்தில், 200 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.