Breaking News
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லை

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையை பொறுத்தவரையில் கடந்த ஜூலை 30-ந் தேதி முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் 9 காசுகள் உயர்ந்து ரூ.79.20 எனவும், டீசல் 14 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.71.55 எனவும் விற்பனை செய்யப்பட்டது. அன்று முதல் கடந்த 50 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை ஒரு நாள் மட்டுமே சற்று குறைந்தது. ஆகஸ்டு 13-ந் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகளும், டீசல் 5 காசுகளும் குறைந்தது. 14, 15 ஆகிய தேதிகளிலும் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இடையில் பெட்ரோல் விலையில் 12 நாட்களும், டீசல் விலையில் 10 நாட்களும் மாற்றம் செய்யப்படவில்லை. மற்ற அனைத்து நாட்களிலும் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே தான் இருந்தது. இதில் பெட்ரோல் அதிகபட்சமாக 51 காசுகளும், டீசல் அதிகபட்சமாக 56 காசுகளும் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.85.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் (ரூ.78.10) விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை நேரடியாக பாதிக்கிறது. இதனை காரணம்காட்டி மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் இப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. லாரி வாடகை உயர்ந்துவிட்டது என வியாபாரிகள் காரணம் கூறி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது பொதுமக்களையும் மறைமுகமாக பாதிக்கத் தொடங்கி உள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.