நடுவானில் பயணிகள் பாதிப்பு: விமான ஊழியர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்
‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு புறப்பட்டது. இதில் 166 பயணிகள் இருந்தனர். விமானம் மேலே எழும்பிய போது, அதனுள்ளே காற்றழுத்தத்தை கட்டுப்படுத்தும் பொத்தானை இயக்க விமானி மறந்ததால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 30 பயணிகளுக்கு மூக்கு, காதுகளில் இருந்து ரத்தம் வடிந்தது.
இதனால் நடுவானில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பைக்கே திரும்பியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆசாத் அஸ்ரப் படேல், தன்னுடைய வக்கீல் உதவியுடன் மும்பையில் உள்ள சாகர் போலீஸ் நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தின் மீது 4 பக்க புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
நடுவானில் விமானத்தில் பயணிகள் பாதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது அந்த தகவல் உண்மை என தெரியவந்தது.
பணியில் அலட்சியம், பயணிகளுக்கு மோசமான சேவை அளித்த ஜெட் ஏர்வேஸ் விமானி உள்ளிட்ட விமான ஊழியர்கள் மீதும், விமான நிர்வாகத்தின் மீதும் இந்திய அரசியல் சட்டத்தின்படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.